50 ஆண்டுகால உப்பாற்று ஒடைக்கு நிரந்தர தீர்வு காண அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கம் முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் T.அழகுராஜா, பொருளாளர் கந்தசாமி, நிர்வாகிகள் திருமால், ரகுபதிசின்னரசு, மதியழகன், தானியேல், ஜோதிமணி ஆகியோர் தூத்துக்குடி வந்த முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாநகரம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 25 கிராமங்களும், கடந்த 50 ஆண்டுகாலமாக பலமுறை வெள்ளப் பேரழிவினால் பாதிக்கப்பட்டு எண்ணிலடங்காத உயிர்ச்சேதாரம் பல ஆயிரங்கோடி பொருட்சேதாரம் பல குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டு வருவது, தொடர்கதையாக ஆகிவிட்டது!
இதற்கு அடிப்படைக் காரணம் 1000அடி அகலம் இருந்த உப்பாறு ஓடை தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு-500அடிக்கும் கீழ் சுருங்கிப்போனதே!
கயத்தாறு, கடம்பூர், கங்கைகொண்டான், மணியாச்சி பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓட்டப்பிடாரம், கொம்பாடி ஓடைவழியாக காட்டாற்று வெள்ளமாக வரும்பொழுது, தூத்துக்குடியை அழிக்காமல் புறவழியாகக் கடலில் சேர்வதற்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதே உப்பாறு ஓடை!
இந்த 1000அடி அகலமுள்ள உப்பாறு ஓடையில்-கோரம்பள்ளம் குளக்கரையில், அத்திமரப்பட்டியில், ஆங்கிலேயர்காலத்தில் 1888ஆம் ஆண்டு, 1000அடி அகலத்தில், 48மதகுகளோடு கட்டப்பட்ட கண்மாவின் மூலம் உபரிநீர் கடலுக்கு அனுப்பப்பட்டு தூத்துக்குடியும், சுற்றுவட்டாரப்பகுதியும் காப்பாற்றப்பட்டு வந்தது!
பின்னர், 1967ஆம் ஆண்டு இடையில் உள்ளத்தூண்கள் அகற்றப்பட்டு 24 மதகுகள் கொண்டக் கண்மாவாக மாற்றப்பட்டது! அப்பொழுது 24 மதகுகள் திறந்தாலும் உப்பாறு ஓடையின் இருகரையும் தத்தாமல் வெள்ளநீர் கடலுக்குச் சென்றது!
இதனால் 2015 ஆண்டு, பெரும் வெள்ளத்தின்போது, வினாடிக்கு 35,000கனஅடிநீர் வெளியேற்ற முடியாமல் கோரம்பள்ளம் குளம் உடைந்தது! அதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி நான்குவழிச்சாலை வெள்ளத்தில் மூழ்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றி தூத்துக்குடியும் சுற்றுவட்டாரப்பகுதியும் அழிந்தது
தொடர்ந்து அழிந்துவரும் இந்த வெள்ளப்பேரழிவிலிருந்து மீட்டெடுக்க 30 வருடங்களாக முயற்சிசெய்தும் பலனில்லை! 2015ஆம் ஆண்டு வெள்ளப்பேரழிவினால் பரிந்துரைக்கப்பட்டு, மத்திய அரசின் வெள்ளப்பேரிடர் நிதியிலிருந்து-ரூ58.5கோடி நிதி ஒதுக்கி-நிரந்தரத்தீர்வுக்கு வழிசெய்யப்பட்டது! ஆனால் அந்தநிதி இதுவரை வரவில்லை!
அப்போதைய மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி அவர்களால், உப்பாறு ஓடையின் முக்கியமான ஆக்கிரமிப்புக்கள் UDRக்கு முன்பு உள்ள அளவுப்படி அளந்து அகற்றப்பட்டு, அவசரநிதியாக 27.5 லட்சம்+86 லட்சம் ஒதுக்கப்பட்டு தற்காலிகத் தீர்வுக்கு வேலைதொடர்ந்து நடந்து வந்தது!
நிரந்தரத்தீர்வுக்கு 58.5 கோடிக்கு நமது அரசுப்பொதுப்பணித்துறை அதிகாரிகளால், மீண்டும் திட்ட அறிக்கைத் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
தற்பொழுது நமது மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் புயல் வெள்ளத்தின் போது, கோரம்பள்ளம் குளம் அத்திமரப்பட்டி 24 கண்மாவிற்கு வருகை தந்து, அனைத்துச் செயல்பாட்டையும் நேரில் கண்டறிந்து, அதிரடிநடவடிக்கை ஆளுமைத் திறமையால், தூத்துக்குடி சுற்று வட்டாரப்பகுதி, மக்களையும், அழிவிலிருந்துக் காப்பாற்றப்பட்டது.
ஒரு கண்மா மதகு திறந்தாலே வெள்ளத்தால் அழிந்த மக்களை, தற்காலிக கரைபோட்டு இன்று 20 கண்மா திறந்தாலும், அழிய விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்!
அத்திமரப்பட்டி 24 கண்மாவிலிருந்து கடற்கரை கழிமுகம்வரை சுமார் 7.5.கி.மீ.நீளம் உள்ளது. தொலைநோக்குத் திட்டத்தில் அனைத்து வேலைகளையும்தொடர்ந்து நிறைவேற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், இதையும் கவனித்து, நிரந்தரத் தீர்வு தந்து, 50 ஆண்டுகால வெள்ளப்பேரழிவிலிருந்துக் காப்பாற்றித்தர வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.