• vilasalnews@gmail.com

'முத்து நகரை ஓட்டை விழுந்த கப்பலாக்கிய 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும்- புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் கோரிக்கை

  • Share on

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை மறுவரையறை செய்து ஒருவார காலத்திற்குள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை முற்றிலுமாக அகற்றிடவேண்டும், இல்லாதபட்சத்தில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியுறுப்பதாவது

தூத்துக்குடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும், மாநகரில் மக்களுக்கு தேவையான சாலை, கழிவுநீர் ஓடைகள், மழைநீர் வடிகால்கள் போன்ற அடிப்படை பணிகள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை.

மழைக்காலம் வந்தாலே மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்படுவது சுமார் 20வருடங்களுக்கு மேலாக முடிவில்லாமல் தொடரத்தான் செய்கிறது. 

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையால் தூத்துக்குடி பிரையண்ட் நகர், சிதம்பர நகர், முத்தம்மாள் காலனி, கதிர்வேல் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, ஹவுசிங் போர்டு, கேடிசி நகர், ஆதிபராசக்தி நகர், சுந்தரவேல்புரம், அம்பேத்கர் நகர், அன்னை வேளாங்கன்னி நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.

குறிப்பாக, தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியானது மழைநீர் தேங்கி கடல் போல காட்சி அளிக்க அங்குள்ள மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் மக்களின் அன்றாட இயல்புவாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளதுடன், பைக், கார் போன்ற வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பல கோடி மதிப்பில் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாநகரில் ஆங்காங்கே முடிவடையாத ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் மாநகரமே அலங்கோலமாகவும், திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் தேங்கிய தற்காலிக குளமாகவும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காட்சி அளிக்கிறது. 

''எந்த எந்த இடத்தில் இதற்கான பணிகள் நடக்கிறது, எப்படி மக்கள் செல்லவேண்டும், மாற்றுப்பாதை என்ன? என்ற எந்த அறிவிப்புகளும் இல்லவே இல்லை'', இதனால், இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளில் அன்றாடம் மக்கள் விழுந்து எழுந்து செல்வதும் வாடிக்கையாகி விட்டது.

தூத்துக்குடி மாநகரை பொலிவுபடுத்தும் பொருட்டு மாநகராட்சியில் ரூ.974கோடி திட்ட மதிப்பீட்டில் மொத்தம் 66பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது என்று மாநகராட்சி கமிஷனர் ஏற்கனவே கூறியுள்ளார்.

ஆனால் இந்த திட்டத்தின் வரைமுறை என்ன?., எங்கெங்கு என்ன என்ன பணிகள் நடைபெறுகிறது?, பணியை செய்து வரும் ஒப்பந்ததாரர் யார்?, பணி தொடங்கப்பட்ட காலம், முடிவடையும் காலம் எப்போது.?, திட்டத்தின் மதிப்பீடு எவ்வளவு?, மாதிரி வரைபடம்? எதுவுமே எங்கும் வைக்கப்படாமல் இருப்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

பருவ மழைக்கு முன்பாகவே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை முடித்திடவேண்டும், திட்டத்திற்கான மாதிரி வரைபடங்கள் வைத்திடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இதில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது இந்த திட்டத்தில் பல லட்சக்கணக்கில் நடைபெற்றுவரும் முறைகேட்டினையும், திட்டம் முடிந்தாலும் பலன் தரப்போவதில்லை என்பதையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

அதுவும் சில பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பணிகள், ஏனோ உடைக்கப்பட்டு மறுபடியும் மழைக்காலத்தில் தரமில்லாத கான்கிரீட் கலவைகளுடன் மீண்டும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிரையண்ட் நகர் 12வது தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை தற்போது உடைக்கப்பட்டு வேறு இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகரில் மழை பெய்தால் மழைநீர் செல்வதற்கான புதிய கால்வாய் எதுவும் அமைக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மொத்தத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முறையின்றியும், சரியான வரைமுறை இன்றியும், மாநகர மக்களின் கருத்துக்களை கேட்காமலும் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ''அழகாக இருந்த முத்து நகரை ஓட்டை விழுந்த கப்பலாக்கி அலங்கோலப்படுத்தியுள்ளதுடன், மாநகர மக்களை மழைநீரில் தத்தளிக்கவும் வைத்து விட்டது'' வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மாநகரின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக ஒத்தி வைத்து, அப்பணிகள் அனைத்தையும் மறுவரைமுறை செய்திடவேண்டும். குடியிருப்பு பகுதிகளில் செய்யப்படும் பணிகள் குறித்து அப்பகுதி பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டு அதன்படி பணிகளை குறைகள் இல்லாத வகையிலும் மாநகரின் எதிர்கால வளர்ச்சி நலன் கருதியும் திறம்பட விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

குறிப்பாக, தூத்துக்குடி மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்து இடங்களிலும் தேங்கி கிடக்கும் மழைநீரை ஒருவார காலத்திற்குள் முற்றிலுமாக துரிதமாக அகற்றிடவேண்டும். இல்லாதபட்சத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி வழிகாட்டுதல்படி, புதிய தமிழகம் கட்சி சார்பில் பாதிக்கப்பட்டுள்ள மாநகர மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டியும், மாவட்டம் முழுவதும் இருந்து புதிய தமிழகம் கட்சி தொண்டர்களை ஆயிரக்கணக்கில் வரவழைத்தும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மணுவில் கூறியுள்ளார்.

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -வடக்கு மாவட்ட திமுகவினர் விருப்ப மனு

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீரை கோமஸ்புரம் குளத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் தீவிரம்

  • Share on