• vilasalnews@gmail.com

வடகிழக்கு பருவமழை தீவிரம் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை நேரில் பார்வையிட்டு இன்று (16.11.2020) ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் பார்வையிட்டார்கள்.  அங்கு இரண்டு 10 எச்பி மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப் படுவதையும் ஆய்வு செய்தார். கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி தேங்கியுள்ள தண்ணீரை வேகமாக வெளியேற்ற அறிவுறுத்தினார். தொடர்ந்து பக்கிள் ஓடை செல்லும் கருத்தப்பாலம் பகுதியை பார்வையிட்டார். திரேஸ்புரம், எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியில் பக்கிள் ஓடையில் வரக்கூடிய கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டார். மேலும் பக்கிள் ஓடை கடலில் கலக்கும் திரேஸ்புரம் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து கிருஷ்ணராஜபுரம், செல்வவிநாயகபுரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றப் பட்டு வருவதை பார்வையிட்டார். விஜய் வேர் கவுஸ் முதல் பெரிய பள்ளம் ஓடை வரை மழை வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் வராமல் அமைக்கப்படும் புதிய காங்கிரிட் வடிகால்  பகுதி களையும், மடத்தூர் மெயின் ரோடு ரெயில்வே கேட் பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ள நீர் வடிந்து செல்வதையும், நீதிபதி குடியிருப்பு பகுதியிலும், சிவந்தகுளம் பகுதியிலும் நீர் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியா்  பார்வையிட்டார். மழை வெள்ள நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன்ரூபவ், சார்ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற் பொறியாளர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.District Administration Inspects Areas under Thoothukudi Corporation

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி தாலுகா மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் 4 மணி வரை 122 மி.மி மழை பெய்துள்ளது .அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆகியோருடன் தாழ்வான மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் எங்கெங்கு இருக்கிறதோ அப்பகுதிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். 36 இடங்கள் தாழ்ந்த பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து ஒரு குழுவாக அமைத்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றவும் சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் சேதம் அடைந்த பழுதடைந்த வீடுகளில் குடியிருப்பவர்களை மாற்று இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தாழ்ந்த பகுதியில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான அளவு மோட்டார் தயார் நிலையில் உள்ளது. 

தற்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 40 பெரிய மோட்டார்கள் மூலம் நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 100 மோட்டார்கள் வரை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளது. திரேஷ்புரம், செல்வநாயகபுரம், பி அண்ட் காலணி, அம்பேத்கர்நகர் ஆகிய பகுதிகளில் மழை சற்று குறைந்த காரணத்தினால் மோட்டார் மூலம் தாழ்ந்த பகுதியில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழை அதிகரித்தாலும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது மின் கம்பிகளோ, கம்பங்களோ சரிந்த நிலையில் உள்ளனவா எனவும்,குழிகள் ஏதும் உள்ளனவா எனவும் பார்த்து கவனமாக செல்லுமாறும், பழுதடைந்த கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்க வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். பேரிடர் தொடர்பான அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077 , தொலைபேசி எண்: 0461-2340101 மற்றும் வாட்ஸ் அப் எண் : 94864 54714 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். மேலும் மழை நேரமாக உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மாநகராட்சி மூலமும் தேவையான சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், மாநகராட்சி தலைமைபொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

  • Share on

வடகிழக்கு பருவமழை தீவிரம் - பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவில்பட்டியில் மழை வெள்ள பாதிப்பு, சுகாதாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம்

  • Share on