தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்செந்தூர் பஸ் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் சாலை என அனைத்துமே வெள்ளநீர் சூழப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலை சுற்றிலும் உள்ள நடைபாதை பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 செ.மீ மழை பதிவாகி உள்ளது.