• vilasalnews@gmail.com

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் : தாமதமான முடிவால் பரிதவிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள்!

  • Share on

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் திடீரென பிற்பகலுக்கு மேல் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் எப்படி வீடு திரும்புவது என பெற்றோர்களும் மாணவர்களும் பரிதவிப்பில் உள்ளனர்.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும்  வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ஏதும் வராத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.

ஆனால் காலை 10 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கி தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று (25.11.2021)  மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திய பின் பாதுகாப்பாக அவர்களை அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரின் இந்த காலதாமதமான அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு அவர்களின் பாதுகாப்பு நலனின் அக்கறை கொள்ளாமல், தற்போது கனமழை பெய்து வரும் இந்த நிலையில் திடீரென அறிவிப்பு வெளியிட்டால், சைக்கிளிலும், நடந்தும் பள்ளிக்கு சென்ற ஏழை,எளிய மாணவர்கள் எப்படி வீடு திரும்புவார்கள்? மழையும் நிற்பதற்கான அறிகுறிகளும் தென்படாத நிலையில் அவர்களை எப்படி வீட்டுக்கு அழைத்து வருவதென பெற்றோர்கள் அதிர்ச்சியிலும், பரிதவிப்பிலும் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்  இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுக்காத அலட்சிய போக்கே இதற்கு காரணம் என பெற்றோர் தரப்பில் குற்றம் சுமத்துகின்றனர்.

கனமழை நீடிக்கும் நிலையில் பள்ளி சென்ற மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவது எப்படி? எப்போது? என்ற பெற்றோரின் குமுறலுக்கு மாவட்ட நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது?

  • Share on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினர் உற்சாகமாக விருப்ப மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் பெய்த மழையின் அளவு!

  • Share on