• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவரை கடத்தி தாக்கியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவரை கடத்தி தாக்கியதாக ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான இளையராஜா உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆம் தேதி பணியை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றபோது ஒரு காரில் 3 பேர் அவரை கடத்திச் சென்றனராம்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். சித்திரவதை செய்ததோடு அவரிடமிருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் மணி பர்சை பறித்துக் கொண்டு மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு அதே அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டுவிட்டு ’ஒரு மணி நேரத்தில் நீ தூத்துக்குடியை விட்டு ஓடிவிட வேண்டும். இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கூண்டோடு அழித்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அதே காரில் சென்றுவிட்டனராம்.

அதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் உயிருக்குப் பயந்து காயத்துடன் மதுரையில் உள்ள அவரது உடன் படித்த நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று நடந்த விபரத்தை அங்கு கூறியிருக்கிறார். அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பயிற்சி மருத்துவர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், மருத்துவர் முருகப்பெருமாளை கடத்திச் சென்று தாக்கியது, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து, தென்பாகம் போலீஸார் இளைய ராஜாவை கைது செய்தனர். இது தொடர்பாக  மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.பெண் விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 10வது மாநாடு!

நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் - ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்!

  • Share on