வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை ‘புரெவி’ புயலாக உருமாறி உள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
வங்கக்கடலின் ஓரத்தில் அமைந்து உள்ளது தூத்துக்குடி மாவட்டம். நீண்ட கடற்கரையை கொண்ட தூத்துக்குடி பெரும்பாலும் இயற்கை சீற்றங்களை தாங்கி கொள்ளும் இயற்கை அரண்களை பெற்று இருக்கிறது. தூத்துக்குடி கடல் பகுதியில் அமைந்து உள்ள தீவுக்கூட்டங்கள், பவளப்பாறைகள், இலங்கை ஆகியவை தூத்துக்குடிக்கு சாதகமாக அமைந்து உள்ளன. இதனையும் மீறி சில நேரங்களில் புயலின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
கடந்த 1992-ம் ஆண்டு தூத்துக்குடியை தாக்கிய புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆறு பொங்கி வழிந்தது.
இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல கிராமங்கள் மூழ்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேரம் வரை 100 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுவீசியது. இந்த புயல் காரணமாக திரேஸ்புரம், புன்னக்காயல், ஆத்தூர், முக்கானி, தருவைகுளம் ஆகிய ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இது தவிர 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கத்தில் 735 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2008 மார்ச் மாதம் பெய்த கனமழையால் 15 கிராமங்களில் 367 வீடுகள் சேதம் அடைந்தன. கடும் பயிர் சேதம் ஏற்பட்டது. 34 ஆயிரத்து 889 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அதே ஆண்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக 7 பேர் இறந்தனர். 481 வீடுகள் சேதம் அடைந்தன.
2009-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் 3 பேர் இறந்தனர். 409 வீடுகள் இடிந்தன. 2011 வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழையால் 3 பேர் இறந்தனர். 467 வீடுகள் சேதம் அடைந்தன. 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் உப்பாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் 5 பேர் இறந்தனர். 116 கால்நடைகள் பலியானது. 2 ஆயிரத்து 682 குடிசை வீடுகள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.