கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மனைவி வனிதா (37) என்பவர் கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் சாந்தராஜ் (61) என்பவரிடம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு ரூபாய் 1,70,000/- (ஒரு லட்சத்து எழுபதாயிரம்) பணத்தை வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மேற்படி கடன் ரூபாய் 1,70,000/-க்கு வட்டியாக வாரம் ரூபாய் 17,000/- (பதினேழாயிரம்) பணத்தை கடந்த 12 வாரங்களாக வனிதா கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சாந்தராஜ் கடந்த 15.11.2021 அன்று வனிதாவின் வீட்டிற்கு சென்று வாங்கிய கடனுக்கு மேலும் வட்டி பணம் கேட்டு அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து வனிதா நேற்று (17.11.2021) அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண் காணிப்பாளர் உதயசூரியனிடம் சம்மந்தப்பட்ட நபரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராணி தலைமை யிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் சாந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.
மேலும்,கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக் கபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.