மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நவ.22ல் 11 மாவட்டங்களில் போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை வருகை தந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த முறை மழை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஹெக்டேருக்கு 71 ஆயிரத்து 400 ரூபாய் என்ற நிலையில் தற்போது ஒரு ஹேக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் என்பது மிக குறைவு.
எதிர்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த திமுக தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. எனவே இந்த நிவாரண உதவியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கூறிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற பாஜக கோரிக்கைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார். இது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சு அல்ல.
மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய பேரிடர் நிதி 300 கோடி ரூபாய் முழுமையாக வழங்கியுள்ளது.
தமிழக அரசு தூர்வாரும் பணிகளை 2000 கிலோ மீட்டர் தூரத்திற்க மேற்கொள்ள வேண்டும். ஆனால் 600 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி நடத்தியுள்ளது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர்...
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ம் தேதி அன்று 11 மாவட்டங்களில் பாஜக முழுநேர போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.
உடன் துத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராஜ், பொது செயலாளர் VSR பிரபு, மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.