• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஒருநபர் ஆணையத்தின் 32வது கட்ட விசாரணை தொடங்கியது!

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 32-வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இதையடுத்து இந்த ஆணையத்தின் தலைவர் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே 31 கட்ட விசாரணை நடத்தப்பட்டு கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட நிர்வாக நடுவர்களான தாசில்தார்கள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 979 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆணையத்தின் 32-வது கட்ட விசாரணை தூத்துக்குடி  கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று தொடங்கியது.

வருகிற 25-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் ஆஜராகி சாட்சியம் அளிக்க துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார், சம்பவத்தின்போது தூத்துக்குடி பகுதியில்  பணியாற்றிய தாசில்தார்கள், மாவட்ட கலெக்டரின் உதவியாளர்களாக பணியாற்றி யவர்கள் என மொத்தம் 41 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தனி அலுவலர்கள் என 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்பேரில், அவர்கள் 7 பேரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் வாக்குமூலங்களை ஆணைய அதிகாரிகள் பதிவு செய்தனர். வரும் நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

  • Share on

நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய்... பார்வைத் திறன் இழப்பு அல்லது நிரந்தரமான பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் ராஜ்குமார் தகவல்!

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நிலம் மோசடி - 2 ஏக்கர் நிலம் மீட்பு - 2 பேர் கைது!

  • Share on