• vilasalnews@gmail.com

நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய்... பார்வைத் திறன் இழப்பு அல்லது நிரந்தரமான பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் : விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் ராஜ்குமார் தகவல்!

  • Share on

நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோயானது பார்வைத் திறன் இழப்பு அல்லது நிரந்தரமான பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் பெர்னால்டு ஆல்பர்ட் ராஜ்குமார் தெரிவித்தார்.

உலக நீரிழிவு தின அனுசரிப்பு நிகழ்வை முன்னிட்டு, தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வளாகத்தில் நீரிழிவு மற்றும் அவை சார்ந்த விழித்திரை அழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  இந்திய அரசின் AICTEன் நீதிபதியும், டெல்லியிலுள்ள தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்தின் உறுப்பினருமான டாக்டர் ராமசாமி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின்  பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர்.பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார் விழிப்புணர்வு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் :

இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் உருவாகிறது. தீவிரமான பார்வைத் திறன் இழப்பு அல்லது நிரந்தரமான பார்வை இழப்புக்கு வழிவகுக்கக் கூடியதாக நீரிழிவினால் உருவாகும் இச்சிக்கல் இருக்கிறது.

இந்தக் கண் பாதிப்பு உருவாகும் இடர் வாய்ப்பை குறைப்பதற்கு தங்களது இரத்த சர்க்கரை அளவை நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஒரு ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறவும் ஆண்டுதோறும் உரிய கால அளவில் அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோயின் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படாத நிலையில் இருக்கும் என்பதால் நீரிழிவு உறுதி செய்யப்பட்ட உடன் விரைவாகவே கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் மற்றும் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதனை செய்ய வேண்டும். நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோய் மிதமான நிலையிலுள்ள நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் மற்றும் மிதமானதிலிருந்து தீவிரமான பாதிப்புள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் தங்களது கண்களை பரிசோதித்து கொள்ளவேண்டும். 

நீரிழிவு மற்றும் நீரிழிவினால் ஏற்படும் விழித்திரை அழிவு நோய் மீதான விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளிகளின் பார்வை திறனை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றும். ஆரம்பநிலையிலேயே பாதிப்பு கண்டறியப்படுமானால் நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவினால் ஏற்படும் பார்வை இழப்பை எளிதாக தவிர்க்கமுடியும்.

சமீப ஆண்டுகளில் இந்த பாதிப்புக்கான சிகிச்சை மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. லேசர் சிகிச்சை, கண்ணுக்குள் போடப்படும் ஊசிகள் மற்றும் நோயின் நிலைமையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை ஆகியவை இதற்கான சிகிச்சைகள் ஆகும்.

நீரிழிவும் மற்றும் அதைத் தொடர்ந்து நீரிழிவு விழித்திரை அழிவு நோயும் அதிக எண்ணிக்கையிலான இளவயது நபர்களுக்கு ஏற்படுவதை நாங்கள் காண்கிறோம்.

விழித்திரை அழிவு நோய்க்கான மிக முக்கியமான பொது இடர் காரணிகள் நீரிழிவு மற்றும் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நிலையின் கால அளவு, அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த சோகை, சிறுநீரக நோய்கள் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை இருக்கின்றன. ஆகவே ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, உட்கொள்ளும் உணவு முறைகளில் மாற்றங்கள் போன்ற வாழ்க்கை முறை திருத்தங்களை செய்வது இத்தகைய சிக்கல்கள் வராமல் தவிர்க்க உதவும். 

மேலும் உலக நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி 50 வயத்திற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு நவம்பர் மாத இறுதிவரை இலவச கலந்தாலோசனை டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வழங்குவதாக தெரிவித்தார்.

  • Share on

தூத்துக்குடி உரக்கடை உரிமையாளரிடம் கமிஷன் கேட்டு தகராறு : இருவர் கைது!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஒருநபர் ஆணையத்தின் 32வது கட்ட விசாரணை தொடங்கியது!

  • Share on