
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஐ.பி.எஸ். அதிகாரி அபின் தினேஷ் மொடக் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு வெள்ளத்தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி சரகத்திற்கு சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் (Inspector General of Police, Economic Offences Wing, Chennai) அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் காவல்துறை தலைவர் அபின் தினேஷ் மொடக் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகம் உள்ள இடங்கள், குளங்கள் மற்றும் ஆபத்தான ஆற்றங்கரை பகுதிகள் குறித்தும், பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக் கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் கோபி, தூத்துக்குடி தலைமை யிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பளார் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.