தூத்துக்குடியில் சாலையில் காயம் பட்டு உயிருக்கு போராடிய கன்று குட்டிக்கு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் மனிதநேய செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ( 9.11.2021 ) தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் இடதுபுறம், ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி செல்லும் வழியில் கன்றுக்குட்டி ஒன்று காலில் அடிபட்டு உயிருக்குப் போராடி வருவதாக வாட்ஸ் அப் குழு வாயிலாக சமூக வலைதளத்தில் அடிபட்ட கன்றுக்குட்டி படத்துடன் தகவல் பகிரப்பட்டது.
தகவல் பதிவு செய்யப்பட்ட 5 நிமிடத்திற்குள்ளாகவே இதனை கண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கால்நடை மருத்துவர் மற்றும் தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்து காயம் பட்ட கன்றுக்குட்டியை காப்பாற்றும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாநகர காவல் துணைகண்காணிப்பாளர் கணேஷ் உள்ளிட்ட காவலர்கள், கால்நடை மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் சாலையில் காயம்பட்டு உயிருக்கு போராடிய கன்றுக்குட்டிக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
காயம்பட்டு தன்னுடைய வலியை வெளியில் சொல்ல முடியாது துன்பப்பட்டு துயரத்தோடு துடிதுடித்து சாலையில் உயிருக்கு போராடிய இளம் கன்றுக்குட்டியின் வேதனையை அறிந்து அதற்கு உதவ, இச்சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தெரியப்படுத்திய நபர் மற்றும் அதனை அறிந்து உடனடியாக மின்னல் வேக நடவடிக்கையில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாநகர காவல் துணைகண்காணிப்பாளர் கணேஷ் உள்ளிட்ட காவலர்கள், கால்நடை மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரின் மனிதநேய செயலை பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.