தூத்துக்குடியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 13.03.2020 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நாளை (நவ.12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில்:
"தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12.11.2021 அன்று காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம்.
தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.