செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமை யிலான போலீசார் நேற்று (09.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே, திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி உடையார் குளம் பகுதியை சேர்ந்தவர்களான முருகேசன் மகன் பூல்பாண்டி (21), மாடசாமி மகன் இசக்கிமுத்து (19) மற்றும் திருநெல்வேலி, பர்கிட் மாநகரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து மேற்படி நபர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
மேலும் மேற்படி நபர்களில் பூல்பாண்டி மீது திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், கார்த்தி கேயன் மீது திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.