தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மளிகை உள்ளது. இங்கு நாசர் மகன் சதாம் உசேன் (29) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 6 அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்த சேசு மகன் பில்லா ஜெகன் (44) மற்றும் 6பேர் மது அருந்த அறை ஒதுக்குமாறு, காவலாளி சதாம் உசேனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அறை தர முடியாது என்று கூறியதால் அவரை அடித்து உதைத்து கல்லால் தாக்கினார்களாம்.
இதில், காயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் உட்பட 6பேர் மீது 152, 147, 148, 452, 294 பி, 332, 324, 506(2), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் பில்லா ஜெகன், அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. சுபாஷ் பண்ணையார் ஆதரவா ளார்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அளித்த புகாரின் பேரில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டு வருகிறது. மேலும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.