தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9½லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நடுச் செக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த நயினார் மகன் பெருமாள் (36). முதுநிலை பட்டதாரி. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தெற்கு சிலுக்கன்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமார் (31) என்பவர் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அதை பயன்படுத்தி தூத்துக்குடி துறைமுறைகத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், கடந்த 12.12.2020 முதல் 25.02.2021 வரை ரொக்கமாக ரூ.3.5லட்சமும், பின் வங்கி கணக்கு மூலம் ரூ.6லட்சம் என மொத்தம் ரூ.9½லட்சம் பணம் வாங்கியுள்ளார். பின்னர் பெருமாள் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று பணத்தை திருப்பித் தருமாறு முத்துக்குமாரிடம் கேட்டதற்கு, அவர் பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பெருமாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில் உதவி ஆய்வாளர் அப்பாத்துரை, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் முருகன் மற்றும் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த முத்துக்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட முத்துக்குமாரை கைது செய்தனர். வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்பின் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது போன்று அரசு வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.