• vilasalnews@gmail.com

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா  பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா  பகுதியில் தண்ணீர் பந்தல், பாலம், உப்பனூர், டி.சி.டபிள்யு பகுதிகள், வெள்ளக்கோயில் - கடம்பகுளம் வடிகால் பகுதி, சேதுவாய்க்கால் - குரும்பூர் பாலம் மற்றும் சாலை பகுதி, குரும்பூர் அங்கமங்களம் பாலம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  இன்று (03.11.2021)பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் உடன் இருந்தார்.

பின்னர்  மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப் படையில் ஏரல் தாலுகா  பகுதியில் அதிகளவு மழை பெய்ததால் கடம்பா மறுகாலில் உபரி நீர் அதிக அளவு வெளியேறியதால் பல்வேறு கிராம பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை மனு மூலம் வழங்கியுள்ளார்கள்.

கடம்பா மறுகாலில் ஆக்கிரமிப்புகள் மற்றும் அமலை செடிகளை அகற்றி மழை காலங்களில் அதிக உபரி நீர் வெளியேற்றும்பொழுது மழை நீர் சீரான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான கோரிக்கைகளும் வைத்துள்ளார்கள். அந்த பகுதிகளையும் இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உரிய அலுவலர் களுக்கு கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தரமான தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனி வேலாயுதம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, ஏரல் வட்டாச்சியர் கண்ணன், தி.மு.க., மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் நவீன்குமார், சதீஸ்குமார், ராமஜெயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • Share on

சாத்தான்குளம் அருகே மாடு திருடியவர் கைது!

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை : ரூ.9½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது!

  • Share on