• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி என்ற அந்தஸ்துக்கு தகுதியற்றது - புதிய தமிழகம் காட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதற்கான தகுதி இன்றுவரை பூர்த்தியாகவே இல்லை என புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை சிறு மழை பெய்தாலே போதும் பெரும்பாலான ரோடுகளில் மழைநீர் குளம் போல தேங்கி விடும். இப்படிப்பட்ட நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி களுக்காக மாநகரிலுள்ள முக்கியமான ரோடுகள் உட்பட பல்வேறு ரோடுகள் தோண்டி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ளது. மாநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ரோடுகள் எல்லாம் மழைநீர் தேங்கி குளமாக காட்சி அளிக்கிறது. இதனால், பொதுமக்கள் சாலைகளில் நடந்து மற்றும் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோடு, திருச்செந்தூர் செல்லும் தேவர்புரம் ரோடு, வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு ரோடு போன்ற இடங்களில் இன்னும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை. இந்த சாலை பணிக்காக ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டி போடப்பட்டுள்ள நிலையில் அவை மழைநீர் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல் காட்சி அளித்து வருகிறது. இதனால் இந்த பள்ளங்களில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயநிலையும் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் துவங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நிலையில், மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகும். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைப்பணிகள் நிறைவடையா ததால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவடையாத நிலையில், கடந்த காலங்களை போன்று மழை தொடர்ந்து பெய்தால் மாநகரின் உள்ளே வாகனங்கள் செல்லவே முடியாமல் தூத்துக்குடி மாநகரம் தனித்தீவாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதனை மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மழைக்காலம் துவங்குதற்கு முன்பு இருந்தே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவேண்டும் என்று நாங்கள் எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் அய்யாவின் வலியுறுத்தல்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனாலும் இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அக்கறை எடுக்கவே இல்லை.

சாலைப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பாதுகாப்பு கருதி தற்போதுள்ள மழைக் காலத்தை கருத்தில் கொண்டு மாநகரில் ஆங்காங்கே தோண்டி போடப்பட்டுள்ள முக்கியமான சாலைகளின் மேம்பாட்டு பணிகளை விரைந்து முழுமையாக முடித்திட வேண்டும். அதோடு சாலைப் பணிகள் முடிவடையாத சாலைகளிலுள்ள பள்ளங்களை தற்காலிமாக மூடுவதுடன், மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் கம்புகள் அமைத்து தடுப்பு வேலிகளை அமைப்பதுடன், சாலைப்பணி தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளையும் வைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த காலங்களை போன்று மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை மற்றும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதுடன், மழைநீரை உறிஞ்சி வெளியேற்ற ஏதுவாக அதற்கான அதிக திறன் கொண்ட மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களையும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் வைத்திடவேண்டும். இதன்மூலம் வடகிழக்கு பருவமழைக்கால இன்னல்களில் மாநகர மக்களை பாதுகாத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

  • Share on

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு : மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்!

  • Share on