தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் ஓரிட சேவை மையம் (OSF) பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் சாத்தான்குளம் வட்டாரங்களைச் சார்ந்த 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட பயனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஓரிட சேவை மையம் (OSF) செயல்பட உள்ளது. இந்த மையமானது அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய ஊரக தொழில்களுக்கு (நுண்,சிறு,குறு மற்றும் குழு) தேவையான தொழில் திட்டம் தயார் செய்தல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், திறன் வளர்ப்பு போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளது.
அதன்பொருட்டு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (EFO) மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் (EDO) போன்ற தற்காலிக பணியிடங்களுக்கு அனுபவம் மிக்க முதுநிலை பட்டம் பெற்ற 40 வயதிற்கு மிகாமல் இருக்க கூடிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்களை www.tnrtp.org என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ / தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் 15.11.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பழைய தாலுகா அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி – 628001 என்ற முகவரி மற்றும் 0461-2902744 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.