• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி... நடந்தது என்ன?

  • Share on

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 7 கொலை வழக்கு உட்பட  கொள்ளை, திருட்டு என 35 வழக்குகளில் ஈடுபட்ட கூட்டாம்புளியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன் என்பரை பிடிக்கச் சென்றபோது போலீசாரை தாக்கியதில், போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் மேற்படி பிரபல ரவுடி பலியானார். 

தூத்துக்குடி  மாவட்டம் கூட்டாம்புளியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் துரைமுருகன் (40) என்பவர் கடந்த 06.10.2021 அன்று பாவூர்சத்திரத்தில் ஜெகதீஸ் என்பவரை கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக பாவூர்சத்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் தனிப்படை உதவி ஆய்வாளர்  ராஜபிரபு, காவலர்கள் சக்திமாரிமுத்து, டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் ராஜீவ் நகர் அருகே கோவலம் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு தலைமறைவாக பதுங்கியிருந்த மேற்படி துரைமுருகன் மற்றம் அவரது இரு கூட்டாளிகள் தப்பி ஓட முயன்றனர், அப்போது அவர்களை பிடிக்க முற்பட்டபோது, இரு கூட்டாளிகள் தப்பி ஓடடிவிட்டனர். மேற்படி துரைமுருகன் முதலில் காவலர் டேவிட்ராஜனை அரிவாளால் தாக்கியுள்ளார், இதில் டேவிட்ராஜன் காயமடைந்தவுடன் எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, உன் மீது கொலை வழக்கு உள்ளது சரணடைந்து விடு என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் மீண்டும் துரைமுருகன் எஸ்.ஐ ராஜபிரபுவையும் அரிவாளால் தாக்கியுள்ளார். அதனால் எஸ்.ஐ ராஜபிரபு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் மேற்படி துரைமுருகன் பலியானார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். அவருடன் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்,  ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட துரைமுருகன் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கடந்த 06.10.2021 அன்று ஜெகதீஸ் (24) என்பவரை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி ஆவார்.

கடந்த 2011ம் ஆண்டு மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிக்குளம் குமார் என்பவரின் மகன் மணிமொழி (44) என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்த வழக்கிலும், 

2003ம் ஆண்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கம் மகன் செல்வம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்,

அதே போன்று 2003ம் ஆண்டு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாலின் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்,

கடந்த 2003ம் ஆண்டு தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரஜினி என்ற ரஜினிகாந்த என்பவரை பணத்திற்காக கடத்திச் சென்று கொலை செய்து, பிரேதத்தை புதைத்த வழக்கிலும்,

கடந்த 2001ம் ஆண்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனி என்ற சீனவாசகம் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கிலும்,

2010ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வனப்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலமுருகன் என்பவரை கொலை செய்த வழக்கிலும்  ஆக மொத்தம் 7 கொலை வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார்.

என்கவுன்டரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட துரைமுருகனுக்கு தூத்துக்குடி மாவட்டம் உட்பட மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினர், திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்படி 7 கொலை வழக்கு உட்பட 21 கொள்ளை வழக்குகளிலும், 6 திருட்டு வழக்கு மற்றும் ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு என மொத்தம் 35 வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பவது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா : பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

  • Share on