திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளீதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமைக் காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (30.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திருச்செந்தூர் இரயில்வே நிலையம் அருகில் சந்தேகத்திற் கிடமான முறையில் நின்றுகொண் டிருந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ் ணன் மகன் செல்வம் (எ) செல்வமுருகன் (34) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி செல்வம் (எ) செல்வமுருகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி தனிப்படையினர் விசாரணையில் எதிரி செல்வம் (எ) செல்வமுருகன் மாநில அளவில் தேடப்பட்டு வரும் முக்கியமான கூலிப்படை ரவுடி, இவர் கடந்த 2011ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் அருகே வன ஊழியர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும் தூத்துக்குடி தாளமுத்துநகர், திண்டுக்கல் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், தாமரைக்குளம், கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் திருவண்ணாமலை ஆகிய காவல் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் உட்பட 15 வழக்குகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரமாக ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 450 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 90 ரவுடிகள் கைது செய்து சிறையிலக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் குற்ற விசாரணை நடைமுறை சட்ட பிரிவு 110 ன் படி இனிமேல் குற்ற வழக்கில் ஈடுபட மாட்டேன் என பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது.
கடந்த வருடம் முழுவதும் 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 146 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.