தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையும் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டா னாவில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் என பல ஆயிரக்கணக்கான மக்கள் உப்பாற்று ஓடை ரவுண்டானா சாலையை தூத்துக்குடி செல்வதற்கும் மற்ற இடங்களுக்கு செல்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல துறைமுகம், தெர்மல், என்டிபிஎல் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலைக்கு சென்று வருவதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
துறைமுகத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் பல டன் எடையுள்ள லோடுகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேற்படி உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் தொடர் விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரையில் சுமார் 200 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள் ளனர். நூற்றுக் கணக்கானோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து தெர்மல்நகர் நோக்கி சென்ற தாயும் பதினோரு வயது மகளும் சென்ற மொபட் மீது லாரி மோதியதில் 11 வயது சிறுமி சம்பவ இடத்திலும் தாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி அத்திமர பட்டியை சேர்ந்த 51 வயதான விவசாயி ஒருவரும் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி உப்பாறாறு ஓடை ரவுண்டான் பகுதியில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எங்களது கட்சியின் சார்பிலும் உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்தோம். அதனைத்தொடர்ந்து தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் மண் சரிபார்ப்புடன் தொடங்கியது. ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை துரிதப் படுத்தி விரைவில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் மேம்பால பணிகள் முடியும் வரையில் உப்பாற்று ஓடை பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் எங்களது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.