தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 29.08.2021 அன்று அதிகாலை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்த தெர்மல் நகர் கேம்ப்-I பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் இராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவரை முன்விரோதம் காரமாணமாக தூத்துக்குடி P & T காலனியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (எ) பாண்டி (21), தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி (21), தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (22), தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பாரத் விக்னேஷ்குமார் (எ) பாரத் (22), தூத்துக்குடி 3சென்ட் அந்தோணி யார்புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மூர்த்தி (எ) மீரான் (19) மற்றும் தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்த குழந்தைதுரை மகன் டேவிட்ராஜ் (23) ஆகியோர் சேர்ந்து கொலை செய்த வழக்கில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரிகள் 6 பேரையும் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான 1) ராஜபாண்டி (எ) பாண்டி, 2) முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி, 3) ராகுல், 4) பாரத் விக்னேஷ்குமார் (எ) பாரத் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவர்களும்,
கடந்த 30.08.2021 அன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (29) என்பவரை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான தமிழ்ச்செல்வன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி அவர்களும்,
கடந்த 04.09.2021 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் சாயர்புரம் சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை பொன்ராஜ் மகன் பக்கிஸ்குமார் (26) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான பக்கிஸ்குமார் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தூத்துக்குடி P&T காலனியைச் சேர்ந்த மூர்த்தி மகன் 1) ராஜபாண்டி (எ) பாண்டி, தூத்துக்குடி 3வது மையில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியன் மகன் 2) முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி, தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் 3) ராகுல், தூத்துக்குடி திரு.வி.க நகரைச் சேர்ந்த வாசுதேவன் மகன் 4) பாரத் விக்னேஷ்குமார் (எ) பாரத், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த 5) முருகன் மகன் தமிழ்ச்செல்வன் மற்றும் சாயர்புரம் சிவத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை பொன்ராஜ் மகன் 6) பக்கிஸ்குமார் ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கடந்த 9 மாதங்களில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட 14 பேர் உட்பட 142 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக் கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.