• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த  ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம்  மீட்கப்பட்டு, மாவட்ட கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  6 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சுடலைமணி (47) என்பவருடைய பெரியப்பாவான கருப்பண்ணன் என்பவருக்கு விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் வடக்கு கிராம பகுதியில் 6 ஏக்கர் புன்செய் நிலம் பாத்தியப்பட்டது.

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். அவரது மனைவியும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் கருப்பண் ணனின் ஒரே மகனும் திருமணம் ஆகாமலே இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் கருப்பண்ணனின் தம்பி மகனான சுடலைமணி மேற்படி சொத்துக் களை அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர் கிராமம் சந்தையடியூரைச் சேர்ந்த செல்லையா மகன் மாரிச்செல்வம் என்பவர் கருப்பண்ணன் உயிரோடு இருப்பது போன்று கருப்பண்ணன் என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயார் செய்து, அதனை உண்மைபோன்று பயன்படுத்தி மேற்படி நிலத்தை கருப்பண்ணன் பொது அதிகாரம் (General Power) எழுதிக் கொடுப்பது போல 22.03.2021 அன்று கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பொது அதிகாரம் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மேற்படி சுடலைமணி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருமாறு கடந்த 26.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  ஜெயராமிடம் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி  விசாரணை மேற்கொண்டு போலியாக பதிவு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலத்திற்கான போலி ஆவணங்களை இரத்து செய்து மேற்படி நிலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட ரூபாய் 36,00,000/-லட்சம் (ரூபாய் முப்பத்து ஆறு லட்சம்) மதிப்புள்ள மேற்படி 6 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இன்று (15.09.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  மனுதாரர் சுடலை மணியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இவ்வழக்கில் விவேகமாக செயல்பட்டு ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை மீட்டுக்கொடுத்த தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  பாராட்டினார்.

  • Share on

அண்ணா பிறந்த நாள் : எட்டயபுரம் பேரூராட்சி அதிமுகவினர் மலர் தூவி மரியாதை!

தூத்துக்குடி அருகே கந்துவட்டி வசூலித்ததாக நிதி நிறுவனங்கள் மீது வழக்கு!

  • Share on