தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கைதி தப்பவிட்ட 4 காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 16.08.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் புளியம்பட்டி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்த மேற்படி சிறைக் கைதி பாலமுருகன் 23.08.2021 அன்று உடல் நலமின்மை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த முதல் நிலைக் காவலர் உதயகுமார் தலைமையில் பகவதி தெய்வம், மணிகண்டன் மற்றும் விக்னேஷ் ஆகிய ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மேற்படி போலீசாரின் பாதுகாப்பிலிருந்து கைதி பாலமுருகன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 4 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய சிறைக் கைதி பாலமுருகனை உடனடியாக கைது செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தப்பி ஓடிய கைதி பாலமுருகன் மீது தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைதியை அஜாக்கிரதையாக தப்பவிட்ட தூத்துக்குடி ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் உதயகுமார், காவலர்கள் பகவதி தெய்வம், மணிகண்டன் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.