தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவர் மீது தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக கடந்த 16ம் தேதி பாலமுருகனை, தனிப்படை போலீசார் கைது செய்து, பேரூரணி சிறையில் அடைத்தனர்.
விசாரணை கைதியாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 23ம் தேதி பாலமுருகனுக்கு திடீர் உடல்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாலமுருகன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று ( 25.08.2021 ) அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் கழிவறைக்கு சென்று வருவது போல் நடித்து மருத்துவமனையிலிருந்து பாலமுருகன் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியுள்ளது.