தூத்துக்குடியில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 220 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 220 அடுக்குமாடி குடியிருப்புகளுக் கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இன்று (24.08.2021) நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 220 அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 400 சதுர அடி கொண்ட 220 அடுக்குமாடி குடியிருப்புக்கு தலா ரூ.8.5 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் மானியம் ரூ.1.5 லட்சம் பயனாளிகளின் மானியம் ரூ.1 லட்சம், தமிழக அரசின் மானியம் ரூ.6 லட்சம் பங்களிப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிசை இல்லா மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தினை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஆய்வின்போது குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் ராஜா கொம்பையா பாண்டியன், வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.