திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சரியான முறையில் வழிபாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் கோவில் நிர்வாகத்தால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை, ஆகிய நாட்களிலும் பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு கடந்த 9-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வருகிற 23-ந் தேதி வரை வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்கள் தரிசனத் திற்கு தடை விதித்துள்ளது. எனவே அந்த நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அரசின் வழிகாட்டு நெறி முறைகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே மற்ற நாட்களில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கோவிலுக்கு வந்து சேரக்கூடிய சூழல் ஏற்படும் போது, காலை 6 மணிக்கு மேல் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்பதால், அவர்கள் அதற்கு முன்னதாக கோவில் வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் வாசல் தெரு நுழைவு வாயில் முன்பகுதியில் சாலைகளில் படுத்து உறங்கும் அவநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பொழுது 5.30 மணி அளவில் கோவில் வளாகத்தில் நுழைய அனுமதிக்கப்படும் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முற்படும் போது அங்கே சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டு, கொரோனா நோய் தொற்று பரவும் அபாய சூழல் அங்கு தென்படுவதை கானமுடிகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதி மற்றும் வழி படும் முறைகளில் தகுந்த முன் ஏற்பாடுகளை திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சரியான முறையில் செய்யாத காணத்தினாலே இது போன்ற அவலநிலை பக்தர்களுக்கு ஏற்படுகிறது என பொதுமக்களும், பக்தர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதே போல் கோவில் பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை பணிகள் நடைபெறுவதால், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துக்கள் திருச்செந்தூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்போது வருவதால், அங்கிருந்து கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் பின்வாசல் நுழைவு வாயில் வரை பக்தர்கள் வருவதற்கான பேருந்து வசதி மாற்று ஏற்படுகளை மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பதிக்கு இணையாக தரம் உயர்த்த திருச்செந்தூர் கோவில் சீரமைப்புக்கு தமிழக அரசு திட்டம் வகுக்க, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றிருக்க, தொகுதி எம்எல்ஏவும் ஆளும் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வரும் போதிலும், தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளே இன்னும் சரிவர பூர்த்தியாகாத நிலை கண்டு என்ன சொல்ல என வேதனை படுகின்றனர் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்.