எப்போதும்வென்றான் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்ல கிருஷ்ணன் மகன் சிவகுமார் (23). இவர் அதே தெருவைச் சேர்ந்த மொட்டையம்மாள் (21) என்பவரை கடந்த 11.07.2021 அன்று காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்துள்ளனர். இதன் காரணமாக சிவகுமார் மற்றும் அவரது தந்தை செல்ல கிருஷ்ணன் (57) ஆகியோர் மொட்டையம்மாளிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மொட்டையம்மாளின் உறவினர்களான அதே தெருவைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் குமார் (எ) பன்னி குமார் (23), இருளப்பன் மகன் வேல்முருகன் (23), முத்து மகன் ஆதி மாரிஸ்வரன் (19) ஆகியோர் சேர்ந்து மொட்டையம்மாளின் கணவர் சிவக்குமார் மற்றும் சிவகுமாரின் உறவினர் முத்தையா மகன் இருளப்பசாமி (37) ஆகிய இருவரையும் வாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் குமார் (எ) பன்னி குமார், வேல்முருகன், ஆதி மாரிஸ்வரன் ஆகியோரையும் மொட்டையம்மாள் அளித்த புகாரின் பேரில் (Counter Case) செல்ல கிருஷ்ணனையும் எப்போதும் வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. கலா வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.