• vilasalnews@gmail.com

மண்புழு உரத் தயாரிப்பு தொழில்நுட்பம் - வேளாண்மை துறை யோசனை!

  • Share on

விவசாயிகள் எளிய முறையில் தாங்களே மண்புழு உரம் தயாரித்து பயனடையலாம் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

செயற்கை மற்றும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளின் தொடர் பயன்பாட்டால் மண் வளம் மற்றும் மண்ணின் தன்மை கெடும் அபாயம் உள்ளது. மண்வளத்தை மேன்படுத்திட இயற்கை மற்றும் அங்கக உரம் இட வேண்டும். அங்ககக் கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் தயாரிப்பது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும். மண்புழு உரத்தில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கும் நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும். விவசாயிகள் எளிய முறையில் தாங்களே மண்புழு உரம் தயாரித்து பயனடையலாம் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

மண்புழு உரம்

மண்புழு உரம் என்பது மண்புழுவின் கழிவுகளை குறிக்கும். மண்புழுக்கள் இயற்கையில் கிடைக்கும் விவசாய கழிவுப் பொருட்களான மக்கிய சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொள்கின்றன. இவை மண்புழுக்களின் குடல்களில் உயிர் வேதியியல் மாற்றங்கள் அடைந்த எச்சங்களாக வெளியேற்றப்படுகின்றன. இதுவே மண்புழு உரமாக பயன்படுத்தப்படுகிறது.

மண்புழுக்களை தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் அமைத்து வளர்த்து அதன் மூலம் மண்புழு உரம் தயாரித்துப் பயன்படுத்த முடியும். நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்கு பரப்ப வேண்டும்.  ஆற்றுமணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ. உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்பி மேலே தண்ணீரை தெளிக்க வேண்டும். பாதி மக்கிய கழிவுகளை மண்புழு உர கட்டமைப்பின் விளம்பு வரை நிரப்பி, தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். இதில் தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானதாகும் தண்ணீரை ஊற்றாமலம் தெளித்து 60 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்க வேண்டும்.

மண்புழு உரம் வாரத்திற்கு ஒரு முறை சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கப்படும் மண்புழு உரத்தில் அங்கக கரிமம் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் உள்ளது. இது மண்வளத்தை மேம்படுத்தி பயிருக்குத் தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் கொடுக்கிறது. மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை நன்கு வளரச் செய்கிறது. அதிலுள்ள ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாக காணப்படும் கியூமிக் அமிலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.

மண்புழு உரம் உபயோகப்படுத்துதல்:

ஒரு எக்டர் பரப்பளவிற்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப் படுகிறது. வளர்ந்த தென்னை போன்ற மரங்களுக்கு ஒரு மரத்திற்கு 5 கிலோ இட வேண்டும். மண்புழு உரத்தை மண்ணில் இடும்பொழுது மண்ணின் அடிப்பாகத்தில் இட வேண்டும். மண்ணின் மேல்பரப்பில் இட்டால் மண்புழு உரத்தில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெயில் பட்டு அழிந்து விடும் நிலை உள்ளது.

மண்புழு உரம் மேலே குறிப்பிட்டவாறு எளிமையான முறையில் தயாரித்து பயனடையலாம் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் கொரோனா 3வது அலை பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on