தூத்துக்குடியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளா் வீட்டில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செயய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி கேடிசி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் குருசாமி (58). இவர், தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு தூத்துக்குடி மேலூர் சார் பதிவாளராக பணியாற்றினார். இவர் மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், அதன் அடிப்படையில் மேலூர் சார் பதிவாளராக பணியாற்றியபோது வருமானத்தை மீறி சுமார் ரூ.83 லட்சம் மதிப்பு சொத்து களைச் சேர்த்ததாக குருசாமி மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி கேடிசி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள குருசாமியின் வீட்டில், தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீஸார் நேற்று வீட்டில் சோதனை நடத்தினர். அந்த குடியிருப்பில் 3 பிளாட்டுகளை சேர்த்து குருசாமி ஒரே வீடாக மாற்றியுள்ளார்.அந்த வீட்டில் போலீஸார் ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை நடத்தினர்.
காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்குபின்னரும் தொடர்ந்து நீடித்தது. இந்த சோதனையின்போது குருசாமி வருமானத்தை மீறி ஏராளமான சொத்துகள் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. அதே பகுதியில், அவருக்கு சொந்தமானமேலும் 5-க்கும் மேற்பட்ட வீடுகள்இருப்பதும், தங்க நகைகள்அதிகளவில் வாங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் வருமானத்தை மீறி பலகோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள் சோதனையில் சிக்கியுள்ளன.