• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலய வளாக கூட்ட  அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நாளை (26.07.2021)  தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள்  நடைபெற உள்ளது. இந்த திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று (25.07.2021) பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இந்த திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா தொற்று இருப்பதால் கடந்த வருடம் எப்படி நடைபெற்றதோ, அதே போன்று இந்த வருடமும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கோவில்களில் சாமி கும்பிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள், தேர் பவனி, சப்பர பவனி போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கொடியேற்றத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் அதற்கும் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  நாளை காலை 7 மணிக்கு மக்கள் பங்களிப்பின்றி கொடியேற்றம் நடைபெறும்.  இந்த பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் தலைமையில் 2 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 400 காவல்துறையினர் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நாளை காலை 4 மணியிலிருந்து கொடிமரம் இருக்கிற இந்தப் பகுதயில் காலை 8 மணி வரை  தடை செய்யப்பட்டுள்ளது, யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

அதே போல மற்ற நாட்களில் சாதாரண பூஜைகள், வழிபாடுகள் நடக்கும், அதற்கு குறைந்த அளவு பக்தர்கள் வந்து செல்லலாம். அதே போல் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் You- Tube  லும் நேரடியாக ஒளிபரப்பப்படும், பக்தர்கள் வீட்டிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். ஆகவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு தந்தை  குமாரராஜா, உதவி பங்குதந்தை விமல்சன், மாதா கோயில் பங்கு துணை தலைவர் ஹாரட்லி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், வடபாகம் அருள், தாளமுத்துநகர் ஜெயந்தி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம்  வனிதா, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு அங்கையற்கன்னி உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பைக் திருட்டு வழக்கில் வாலிபர் கைது!

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி!

  • Share on