எட்டயபுரம் அருகே முந்திரி தோடு ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து நாசமானது.
தூத்துக்குடியில் இருந்து முந்திரி தோடு ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்துக்கு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை திருச்சி மாவட்டம் நெய்குளத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 45) ஓட்டினார். அவருடன் லாரியில் பெரம்பலூரை சேர்ந்த விவேக் (32) என்பவர் இருந்தார்.
தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் சென்றபோது திடீரென லாரியின் பின் பக்க டயர் பஞ்சரானது. இதனால் பிரபாகரன் லாரியை சாலையோரம் நிறுத்தினார்.
அப்போது லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து பிரபாகரன், விவேக் ஆகியோர் அங்கிருந்து சில அடி தள்ளிச்சென்றனர். அப்போது லாரியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால், லாரியில் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரியில் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.