மத மோதலை உருவாக்கும் வகையில் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் கட்சிகள் மீது அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை யில் கடந்த 18ஆம் தேதி அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்துக்கு சொந்தமான மைதானத்தில் கிறிஸ்தவ இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்துமதத்தையும், பாரத மாதாவையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அரசியல் கட்சிகளை தரம் தாழ்ந்து அவதூறாக பேசினார்.
அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர் மேலும் பாஜக இந்து அமைப்புகள் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.
இந்நிலையில் சார்ஜ் பொன்னையா அவதூறு பேச்சை கண்டித்தும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில், தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஜார்ஜ் பொன்னையாவின் புகைப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார், கோட்ட இணை அமைப்பாளர் ராஜா, ஓபிசி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், விஎஸ்ஆர்.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், வழக்கறிஞர் வாாரியார், செய்தி மற்றும் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.