தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6வது வாரமும் 2வது தவணையாக 14வது வாரமும் ஊக்குவிப்பு தவணையாக 9வது மாதத்திலும் வழங்க உலகளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பாத்திமா நகர், நகர் நல மையத்தில் ஆறு வார குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
மாதந்தோறும் சுமார் 1800 குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் களப் பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வைத்து தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியை பெற்று நலமோடு வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் போஸ்கோ ராஜா, டாக்டர் அனிதா, நகர் நல அலுவலர் டாக்டர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.