• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வரும் இவ்வேளையில் விவசாய பணிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவில் யூரியா 3335 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 925 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1056 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1534 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வுரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2020-21ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே 2021-22ம் ஆண்டில் டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை அறிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலைக்கு உர விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உர விற்பனையாளர்கள், அரசு சலுகை பெறும் மானிய உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையின் அடிப்படையில் விற்பனை செய்தல் வேண்டும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, கண்டிப்பாக தங்கள் ஆதார் அட்டையை எடுத்து செல்ல வேண்டும். 

உர விற்பனையாளர்கள் நிறுவன வாரியாக உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் தினசரி பதிவு செய்து பராமரித்தல் வேண்டும். "ஓ” படிவத்தில் பதிவு செய்து உர உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை நிலையத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்திடல் வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்புடன் உர விற்பனை நிலையங்கள் செயல்பட வேண்டும்.

மேலும், உரிய ஆவணங்கள் இன்றி உரம் விற்பனை செய்தாலோ, விவசாயி அல்லாதோருக்கு உர விற்பனை செய்யப்பட்டாலோ, ஓரே நபருக்கு தேவைக்கு அதிகமான மானிய உரங்களை விற்பனை செய்தாலோ, விற்பனை முனையக் கருவி பயன்படுத்தாமல் உர விற்பனை செய்தாலோ அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ உர உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., மனு!

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன்களுக்கான நகைகளை திருப்பி வழங்க தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

  • Share on