தூத்துக்குடியில் விளையாட சென்ற போது மாயமான சிறுவன் கடலில் சடலமாக மீட்கப்பட்டான்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மாதவன் (5), நேற்று மாலை விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவனை காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இந்நிலையில், இன்று காலை தூண்டில் பாலத்தின் கீழ் கடலில் மாதவன் சடலமாக மிதந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்து வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூண்டில் பாலத்தில் விளையாடியபோது கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.