தூத்துக்குடியில் கொட்டித்தீர்க்கும் கனமழையிலும் கடமை தவறாது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தனது பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவரின் செயலை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொது மக்கள் என பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் இன்று ( 16.11.2020) காலை முதல் மணிக்கணக்கில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தென்பாகம் போக்குவரத்து காவல் பிரிவு முதல்நிலை காவலர் முத்துராஜ் என்பவர், கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கொட்டும் கனமழையிலும் , கடமை உணர்வோடு பணியில் ஈடுபட்ட காவலர் முத்துராஜை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், பொதுமக்கள் என பலரும் வெகுவாக பாராட்டினர்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,தூத்துக்குடி வி.வி.டி சிக்னலுக்கு நேரில் சென்று அங்கு போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர் முத்து ராஜ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.