ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், பொறியாளர், செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரத்தினவேல் தலைமையிலான ஊராட்சி மன்ற தலைவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்.
கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாதபோது உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் அதிகாரங்கள் தற்போதும் தொடர்கிறது. ஊராட்சிமன்ற பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களை நிர்வகிக்க விடாமல் அவர்கள் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் நிதியில் பொதுமக்களின் நேரடி பங்களிப்புடன் செய்யக் கூடிய எந்த ஒரு பணிகளுக்குமான நிதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் பணிகளிலும் தலையீடு மேற்கொண்டு, தங்களது மனைவி மற்றும் பினாமி பெயர்களில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணிகளை ஒதுக்க வேண்டும் எனவும் நிர்பந்திக்கிறார்கள். மேலும், அவர்களின் சட்டவிரோதமான இந்த செயல்களுக்கு உடன்படாத கிராம ஊராட்சிகளில் பல்வேறு வகையிலும் நெருக்கடிகள் தரப்படுகிறது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி வேறு ஒப்பந்த காரர்களுக்கு பணிகளை ஒதுக்கும் போது அத்தகைய பணிக்கான தொகையை வழங்காமல் நீட்டிப்பு செய்து பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் ஊராட்சி ஒன்றிய ஆணையர், பொறியாளர், செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தருகின்றனர். எனவே ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறிப்பதோடு, பினாமி பெயரில் சட்டவிரோதமாக ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள புகார் மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் உத்தண்டுராமன், மூப்பன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லிங்கேஸ்வரி, தீத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, டி.சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ விநாயக மூர்த்தி, எம்.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், கீழ ஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சை பாண்டியன், சுரைக்காய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.