தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது. இந்த 75 சதவீதம் கட்டணத்தையும் வசூலிக்க பெற்றோர் மற்றும் மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயபடுத்தக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 100 சதவீதம் கட்டணம் வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையை கண்டித்தும் கையில் பாத்திரங்களை ஏந்தி பிச்சை எடுப்பது போன்று, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமையில் மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகௌரியை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அனைத்து பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் அதையும் செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. அனைத்து பள்ளி வாயில் முன்பு அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டண விபரங்கள் ஒட்டப்பட வேண்டும்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்பட வேண்டும். 2020 -21 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்க கூடாது. 100 சதவீத கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளிட கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.