• vilasalnews@gmail.com

“ஜெய்ஹிந்த்“ மீண்டும் முழங்க தொடங்கியிருக்கிறது!

  • Share on

ஒவ்வொரு இந்திய உணர்வாளர்களையும் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு  தள்ளியிருக்கிறது தமிழக சட்டப்பேரவையில் நடந்தேறியுள்ள ஓர் சம்பவம்.

கடந்த சில வாரத்திற்கு முன்பு நடந்த, தமிழக சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். அப்போது, ‘‘கடந்தாண்டு ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்’ என முடிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், தற்போது ஆளுநர் உரையின் முடிவில், ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே இருந்தது. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் முழங்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பின்னர் பின்பற்றி பேசினார். இந்தியர்களின் ஒருங்கிணைந்த உணர்வை, தேசப்பற்றை வெளிப்படுத்தும் வாக்கியமான ஜெய்ஹிந்த் என்பதை பற்றியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்பது போலவும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசியுள்ளதாக பாஜக உள்ளிட்ட தேசியவாதிகள் இடையே இச்செயலுக்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.

‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை நான் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறுப்பவனும் இல்லை. நான் கூறியது வெறுப்பின் வெளிப்பாடு என்ற பாஜக உள்ளிட்டோரின் புரிதலே தவறானது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளில் இரண்டு ஆளுநர்களின் உரையையும் நான் ஒப்பீடு செய்துள்ளேன். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையில், இதுவரை இந்தி வார்த்தைகள் வந்தது இல்லை. ஆனால், கடந்த முறை ‘ஜெய்ஹிந்த்’ என்ற இந்தி வார்த்தையை போட்டுள்ளனர். அதை ‘வெல்க பாரதம்’ என போட்டு இருக்கலாம். ஆனால், தற்போதைய திமுக அரசு அமைந்த பின்னர், பழைய நடைமுறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். நன்றி, வணக்கத்தோடு நிறுத்தி உள்ளனர். ஆகவே இந்த அர்த்தத்தின் வெளிப்பாட்டிலே நான் சட்டசபையில் பேசியது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறுகிறார்.

இதே வேளையில், “ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்“ என்று கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் வழியில்

“ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்“ என பலரும் காரசாரமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்திய சுதந்திரத்திற்கு தூண்டுகோலாக இருந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சியாக சட்டசபையில் திமுக வின் கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவர் பேசி இருப்பதும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்தவொரு  ஆட்சேபணை அசைவையும் காட்டாமல் இருந்திருப்பது  தவறான முன்னுதாரணமாகும் என தேசிய உணர்வாளர்கள் இடையே கருத்துப் பதிவுகள் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், தேசிய கட்சியான  பாஜக சட்டமன்ற உறுப்பினரும் சட்டசபையில் எதிர்வினையாற்றாமல் வேடிக்கை பார்த்தது ஏன்? என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது “ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தை பிறந்து
பல  ஆண்டுகளை எட்டியிருக்கும் இந்த காலகட்டத்தில், “ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தையை மீண்டும் உயிர்பித்து வளர்த்தெடுக்கும் காலத்தில் நாம் நிற்கிறோம் என்பதை உணர்ந்து, அதை உணர்த்தும் வகையில், அன்று சுதந்திர போருக்கு முதல் முழக்கமிட்ட பல விடுதலை போராட்ட வீரர்களை கண்டெடுத்த தென்தமிழகத்தில், தற்போது சுதந்திர உணர்வை தட்டியெழுப்பிய “ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தை உச்சரிக்கும் போராட்டத்திற்கும் முதல் முழக்கமிட்டு  தொடங்கியிருக்கிறது உரிமைப்போராட்ட ஊரான தூத்துக்குடி மண்.


“ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தை சுதந்திர உணர்வை தட்டியெழுப்பிய வார்த்தை மட்டும் அல்ல, பன்முகத்தன்மை கொண்ட அனைத்து மாநில மக்களையும் இந்தியா எனும் தேசிய ஒற்றுமை உணர்விற்கான வழிவகை செய்யும் உன்னதமான வார்த்தை ஆகும். இவை இந்த சேதம் இருக்கும் வரை உயிர்ப்போடு இம்மண்ணில் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இந்தியனும் எண்ணவேண்டும் என்பதற்காக,  ஒரு சிறு முயற்ச்சியின் வெளிப்பாடுதான் இவை என கூறுகிறார், தனது "அரசு பணிக்கான போட்டித் தேர்வு இலவச பயிற்சி மைய" வளாக வெளிப்புற சுவற்றில்,   “ஜெய்ஹிந்த்“ என்ற வார்த்தையை வர்ணம் தீட்டியிருக்கும், தூத்துக்குடி கின்ஸ் அகடாமி நிறுவனத் தலைவர் பேச்சிமுத்து.

நீட் உள்ளிட்ட சில விவகாரங்களில்
தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கக் கூடும் என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும். தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதே தமிழகத்திற்கு நல்லது. பிரிவினையை தேடும் எந்த நாடும் முன்னேறியது இல்லை. இதற்கு உதாரணம் நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் ஒன்றே போதுமானது.

இந்திய சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பிய சுதந்திர முழக்கங்களில் ஒன்றான ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை, மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தின் நிகழ்வில் நிகழ்ந்த உரையில்  இடம்பெறாமல் கடந்து போயிருப்பதை வரவேற்று  பேசிய பேச்சுக்கு  பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த செயல் ஏற்புடையது அல்லவே.

ஒன்றிய அரசு என்று உச்சரிக்கும் தமிழக அரசு அதனோடு ஒன்றிப்போவது தான் திமுக தலைமையிலான தமிழக அரசிற்கும், மாநில வளர்ச்சிக்கும் நல்லது.

  • Share on

குலசேகரன்பட்டினத்தில் வீடு புகுந்து ஒருவர் வெட்டிக்கொலை!

தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

  • Share on