குலசேகரன்பட்டினத்தில் வீடு புகுந்து தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுயம்பு மகன் பெருமாள் (வயது 30). கூலி தொழிலாளி.
இன்று காலை பெருமாள் வெகுநேரம் ஆகியும் வீட்டில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய அத்தை அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் பெருமாள் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து , காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று இரவு வீடு புகுந்த மர்மநபர்கள் பெருமாள் தலையில் அரிவாளால் வெட்டியும், குழாயால் தாக்கியும் கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது.
மேலும், பெருமாளுக்கும், அவருடைய உறவினர்களான 2 பெண்களுக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்களை பெருமாள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த முன்விரோதத்தில் பெருமாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட பெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து தொழிலாளியை வெட்டிக்கொன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.