தூத்துக்குடியில் மருந்து கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கி ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்த 4பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி, தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பால கார்த்திக் (27), மெடிக்கல் ரெப்பாக இருக்கும் அவர், அதே தெருவில் பிரதம மந்திரியின் பாரத மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வருகிறார். இவரது நண்பர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுரேஷ்பாபு. இந்நிலையில் ஜூலை 1ம் தேதி மாருதி காரில் 5 பேர் கொண்ட கும்பல் பால கார்த்திக்கையும், சுரேஷ் பாபுவையும் கடத்திச் சென்று தாக்கியுள்ளது. பின்னர் சுரேஷ்பாபுவை இறக்கி விட்டு, கும்பலில் 2 பேரும் அங்கு இறங்கிக் கொண்டனர்.
பின்னர் மற்ற மூவரும் அதே காரில் மீண்டும் தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவுக்கு பாலகார்த்திக்கை அவரது மருந்துக் கடைக்கு சென்று அங்கிருந்த அவரது மனைவி சித்திரகலாவிடம் "தாங்கள் மதுரை ஸ்பெஷல் டீம் என்றும், கரோனா மருந்தை நீங்கள் விற்பதற்கு வைத்துள்ளதால் கைது செய்ய வந்துள்ளோம். உங்கள் கணவரை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
ஆனால் பணத்தை தர சித்ரகலா மறுக்கவே, அவரது கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் எடை கொண்ட 2 செயின்களையும், 2 செல்போன்களையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த பால கார்த்திக் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பால கார்த்திக்கின் மனைவி சித்ரகலா, தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை டவுன், குமரன் தெருவைச் சேர்ந்த ராமசுப்பு மகன் சரவணன் (39), குன்னத்தூர் ரோடு செய்யது இப்ராஹிம் மகன் சதாம் உசேன் (31), பழையபேட்டை கோவில் தெருவைச் சேர்ந்த காந்திமதி நாதன் மகன் சுரேஷ் பாபு (31), மற்றும் சென்னை துண்டலம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த துரைசாமி மகன் வீரமணிகண்டன் (29), ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, செல்போன் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.