தூத்துக்குடி அருகே அடுத்தடுத்து 4 இடங்களில் டாஸ்மாக் ஊழியர் உட்பட 4பேரிடம் பணம், செல்போனை பறித்துச் சென்ற 6பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள ஓட்டப்பிடாரம் பச்சை பெருமாள்புரம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து மகன் ஆனந்தராஜ் (49), இவர் புதியம்புத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஓசனூத்து - செவல்குளம் அருகே சென்றபோது 3 பைக்குகளில் வந்த 6பேர் கும்பல் அவரை வழிமறித்து தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.11ஆயிரம் பணம், செல்போன், மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷிப்பிங் நிறுவன ஊழியரிடம்....
பாஞ்சாலங்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் மோகன்ராஜ் (32), இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலைவார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குறுக்குச்சாலை ரோட்டில் சென்றபோது சக்கரம்பட்டி விலக்கு அருகே 6பேர் கும்பல் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடம் இருந்த ரூ.8ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்று விட்டது. கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் வழிப்பறி...
இதுபோல் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாறைக்குட்டம் மேற்கு தெருவைச் சேர்ந்த துரைபாண்டி மகன் செல்வம் (24), இவர் நேற்று பச்சைபெருமாள்புரம் அருகே சென்றபோது 6பேர் கும்பல் அவரை வழிமறித்து செல்போன் ரூ.500 பணம் பறித்துச் சென்றுள்ளது. மேலும், சிவகங்கை மாவட்டம் முதுக்குளத்தூர் கருப்பசாமி மகன் ஜெகன் (28), கண்டெய்னர் லாரி டிரைவரான இவர் வாலசமுத்திரம் அருகே லாரி பழுதாகி நின்றதால் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 6பேர் கும்பல் அவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்றுவிட்டது. இந்த 4 சம்பவங்களும் நேற்று இரவு அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. இதுகுறித்து புகார்களின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப் பதிந்து, 6பேர் கும்பலை தேடி வருகின்றனர்.