பாரதப் பிரதம மந்திரி மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட உள்ள "பொது சேவை மையம்" கட்டிட பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளரும், பாரத பிரதம மந்திரி மக்கள் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் திட்டக் குழுவின் உறுப்பினருமான சித்தி ரம்ஜான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பாரத பிரதம மந்திரியின் மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காயல்பட்டினம் நகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நகரத்தில் பொது சேவை மையம் கட்டுவதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக நடைபெற்ற பல சுற்று திட்டக்கூட்டத்தில் பாரத பிரதம மந்திரி மக்கள் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தும் திட்டக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு அதற்கான ஆலோசனை வழங்கியதோடு, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோரை தொடர்பு கொண்டு மேற்படி கட்டிடம் கட்டுவதற்காக காயல்பட்டினம் சிவன் கோவில் தெரு விரிவாக்கம் பகுதியில் 5617 சதுரடி விஸ்தீரணம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இத்திட்ட பணிக்கான முதல்கட்ட தொகையினை பொதுப்பணித்துறைக்கு கொடுக்கப்பட்டதாகவும், இதற்கான டெண்டரும் விடப்பட்டதாகவும் அறியமுடியாது. இந்நிலையில் மேற்கண்ட கட்டிடத்திற்கான கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே மேற்கண்ட கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை உடனே துவங்கிட ஆவண செய்ய பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.