தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை இன்று துவங்குகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நடைபெற்ற 27 கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறி ஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 1052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 719 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவர்களது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக 1126 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை ஆணையத்தின் தலைவர் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் விசாரணை துவங்குகிறது.
இந்த ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் இன்று ( ஜூலை 5ம் தேதி ) முதல் 15ம் தேதி வரை ( ஞாயிற்றுக்கிழமை தவிர ) நடக்கிறது.
இதில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்துவதற்காக சம்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.