கயத்தாறு அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 5 பவுன் நகையை மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வில்லிசேரி இந்திராநகர் நடு காலனியைச் சேர்ந்தவர் தங்க மாரிமுத்து. இவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 42). இவரிடம் கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் (46) என்பவர் தன்னை சாமியார் என்று கூறி அறிமுகமானார்.
அப்போது அவர் முருகலட்சுமியிடம், ‘உங்களுக்கு நேரம் சரியில்லை. எனவே பரிகார பூஜை செய்ய வேண்டும். இதற்கு உங்களது தங்க நகைளை மூலிகை தண்ணீரில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய முருகலட்சுமி தன்னிடம் இருந்த 5 பவுன் நகைகளை முத்துராமலிங்கத்திடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட அவர், ஒரு டம்ளரில் மூலிகை தண்ணீரை நிரப்பி அதற்குள் நகைகளை போட்டு மூடிக் கொடுத்தார். மேலும் அதனை பூஜை அறையில் வைத்து குறிப்பிட்ட நாட்கள் பூஜை செய்ய வேண்டும். அதற்கு இடையில் அதனை திறந்து பார்க்கக்கூடாது என்று கூறி விட்டு சென்றார்.
முருகலட்சுமி பூஜை அறையில் குறிப்பிட்ட நாட்கள் பூஜை செய்த பின்னர் டம்ளரை திறந்து பார்த்தபோது, அதில் நகைகள் இல்லை. எனவே முத்துராமலிங்கம் நூதன முறையில் நகைகளை மோசடி செய்தது குறித்து முருகலட்சுமி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் முத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், முத்துராமலிங்கம் தன்னை சாமியார் என்று கூறி பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 5 பவுன் நகைகளை மீட்டனர்.