தென்மாவட்டங்களில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பாஜக கட்சியில் இணைய வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா என்ற இந்த சித்தாந்தம் அனைவருக்குமான பொதுவானவை எனவும் அகில இந்திய பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணி சார்பாக புதுக்கோட்டையில் ஏழை, எளிய பொது மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறுபான்மை அணி மாவட்ட பொதுச் செயலாளர் லயன் டாக்டர்.ஜெபக்குமார் தலைமை வகித்தார். சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் இன்னாச்சி முன்னிலை வகித்தார். அகில இந்திய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறுகையில் :
தமிழகத்தில் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களை வழங்க விடாமல், காவல் துறையின் மூலமாக தடுக்கக்கூடிய வேலையை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், தொடர்ந்து தேச விரோத கருத்துக்களையும் பிரிவினைவாத கருத்துக்களையும் திமுக அமைச்சரவைகளில் உள்ளவர்களும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் பேசிவருவது தேச பிரிவிவாதத்திற்கு அழுத்தமாக வழிவகுக்கும் என பாஜக கருதுகிறது. அந்த அடிப்படையிலே திமுகவின் தேசவிரோத செயல்களுக்கு நாங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறோம்.
ஜெய்ஹிந் என்ற மந்திரச்சொல் தேசத்தின் ராணுவ வீரர்கள் உயிர் பிரியும் பொழுது, தேசத்திற்காக உயிர் கொடுக்க கூடிய அந்த உன்னதமான தருணத்தில் உரக்கச் சொல்லக்கூடிய ஜெய்ஹிந்த் என்ற அந்த உணர்வு பூர்வமான வார்த்தையை, சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை, கவர்னர் உரையில் இடம் பெறாமல் நீக்கியதை, அதை ஒரு சட்டமன்ற உறுப்பினர் மிகப் பெருமையாக பேசுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதும், தேச விரோத கருத்துக்களை இவர்கள் மிக ஆழமாக விதைக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் வந்துகொண்டிருக்கிறது.
சட்டமன்றம் வளாகத்திற்குள்ளேயே சீமான் இந்தியா என்றொரு நாடு இல்லை. இனிமேலும் இந்தியா என்ற ஒரு நாடு இருக்காது என்று சொல்லு கிறார் என்றால், அதை இன்றைய தேதி வரை திமுக தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டிக்காதது, இது போன்ற தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் இந்துக்களுடைய புனிதமிக்க நம்பிக்கைகளை தொடர்ந்து திமுக கொச்சை படுத்தி வருகிறது.
பக்ரீத் பண்டிகையின் போது பசுவை அறுப்பதும் அதை சமூக வலைதளங் களில் பரப்புவதும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து செய்கிறார்கள். இத்தகைய அரசியல் சாசனத்துக்கு எதிராக, தமிழக சட்டத்திற்கு எதிராக இங்கு இருக்கக் கூடிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் செய்வார்களேயானால் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியின் சார்பாக அதைத் தடுத்து நிறுத்துவோம். சட்டப்படி காவல் துறையில் புகார் அளித்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என்ற அளவில் நாங்கள் ஜனநாயக ரீதியாக களத்தில் இறங்குவோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஜிஎஸ்டி வரியை மாநில அரசுகள் ஏற்குமானால், இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு கணிசமாக குறையும். ஆனால் இன்றைய தேதிவரை குறிப்பாக தமிழ்நாடு நாங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவோம் என்று சொல்லவில்லை. தொடர்ந்து மத்திய அரசைக் குற்றம் சாட்டக் கூடிய தமிழக அரசு, ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் என்று அறிவிப்புச் செய்தால், நிச்சயமாக பாஜக அதை வரவேற்கும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். ஆனால் அதுபோன்ற செய்யாமல் மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசை குறை சொல்வதற்காக பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா தடுப்பு மருந்தை ஒழுங்காக அனுப்ப வில்லை என்ற பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள்.
நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த காலங்களில் மிகத் தெளிவாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அது தொடர்ந்து நடைபெறும் என்றும் அது தமிழகத்திற்கு விதி விலக்கு தர முடியாது என்று தெளிவு படுத்திய பின்பும் இது தமிழக மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றுவதற்காக திமுக அரசு செய்த தொடர்ந்து பொய்யான அவதூறுப் பிரச்சாரம் தான், நீட்தேர்வு நாங்கள் வந்தால் விலக்கு என்பது. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்காக ஒரு குழு அமைத்தார்கள் அப்படி அமைக்கப்பட்ட குழுவிற்கு எந்த அடிப்படையில் நீங்கள் இந்த குழுவை அமைத்து இருக்கி றீர்கள்? உச்சநீதிமன்றத்துக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டது தவறு என்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதனால் நீட் தீர்வை வைத்து இனி திமுக அரசியல் செய்யமுடியாது. தேர்விற்காக மாணவர்கள் தயாராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாங்கள் மாணவர் இடத்திலே அறிவுறுத்துகிறோம்.
மேலும், தென்மாவட்டங்களில் சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் பாஜக கட்சியில் இணைய வேண்டும் என்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சியின் உடைய இந்துத்துவம் என்ற இந்த சித்தாந்தம் அனைவருக்குமானது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்து வதற்காகவும், பாரதிய ஜனதா கட்சியின் மீது ஏகப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு களை கூறிவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பொய்யான முகமூடியைக் கிழிப்பதற்காகவும் தொடர்ந்து மாவட்டம் தோறும் நான் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர் குமார், தூத்துக்குடி தெற்கு ஒன்றியத் தலைவர் இளங்கோவன், தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைத்தலைவர் போத்திராஜா, மாவட்ட இளைஞரணி தலைவர் காளிதாசன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜா, இளைஞ ரணி ஒன்றியத் தலைவர் ராஜசேகர், இளைஞரணி ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், மாவட்ட கல்வி பிரிவு தலைவர் வினோத்குமார், மாவட்ட கல்வி பிரிவு செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் என்ற பிரபு நன்றியுரை கூறினார்.