உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா ஜூலை 26ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கும். உலகப் பிரசித்தி பெற்ற இத்திருவிழாவில் உள்ளூர் முதல் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு 439வது ஆண்டு விழா வருகிற 26ம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும். முன்னதாக 25ம் தேதி ஞாயிறு மாலை 6.00 மணி சிறப்பு காணிக்கைப் பவனி நடைபெறுகிறது.
26ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆக.1ம் தேதி காலை 7.30 மணிக்கு புது நன்மை திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு திவ்ய நற்கருனை பவனி நடக்கிறது.
ஆக.5ம் தேதி அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. நவ நாட்களில் காலை 4.30 மணிக்கு செபமாலை, திருப்பலிகள், மாலை 3 மணிக்கு செபமாலை மறைவுறை, இரவு 7.15க்கு நற்கருனை ஆசீர் நடக்கிறது. இவை அனைத்தும் ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தே இதைக் காணலாம்.
கொரோனா ஊரடங்கு விதிகளின்படி திருவிழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில், அருட்தந்தையர், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.